அரசு பெண்கள் பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேற்கூரை திடீரென்று பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-27 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அருகில் உள்ள ஊர்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு தலைமை ஆசிரியர் அறையுடன் கூடிய அலுவலக கட்டிடம் பள்ளியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

ேநற்று முன்தினம் மாலை அந்த அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் இருக்கையின் முன்பு திடீரென மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு தலைமை ஆசிரியர், அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் யாரும் இல்லாததால் அவர்கள் காயமின்றி தப்பினர்.

இதுகுறித்து உடனடியாக தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மேற்கூரை பெயர்ந்து விழுந்த இடத்தை பார்வையிட்டு சென்றனர்.

இதற்கு முன்பு அதே அலுவலகத்தின் வராண்டாவில் உள்ள மேற்கூரையிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. அது தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த கட்டிடத்தின் மேற்கூரையை முற்றிலும் அகற்றிவிட்டு புதிதாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்