கூடலூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ் திடீர் நிறுத்தம்
கூடலூரில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் வெளிமாவட்ட மக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் வெளிமாவட்ட மக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை வழித்தடத்தில்
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனால் சென்னை, சேலம், ஈரோடு, திருச்சி, கோவை, திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது, இதேபோல் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு விரைவு பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து திருமங்கலம், ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு பஸ் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
அவதி
இதனிடையே ஆடி மாதம் முடிவடைந்து ஆவணி தொடங்கி உள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் களை கட்டி உள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி, செங்கோட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு பஸ் திடீரென கூடலூருக்கு வரவில்லை. தொடர்ந்து கூடலூரில் இருந்து செங்கோட்டை வழித்தடத்துக்கு பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பொதுமக்கள் விசாரித்த போது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.