மின்ெனாளியில் ஜொலிக்கும் வண்ணார்பேட்டை மேம்பாலம்
நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியனார் மேம்பாலம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சபாநாயகர் செல்லபாண்டியனார் மேம்பாலத்தில் நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அலங்கார மின்விளக்கு பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மின்விளக்கு இயங்குவதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மின்விளக்குகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு காலநிலை மற்றும் விழாக்களுக்கு ஏற்றவாறு மின்விளக்குகளின் நிறங்களையும், வடிவங்களையும் நவீன டிஜிட்டல் முறையில் மாற்றி மாற்றி வடிவமைத்து ஒளிர செய்வதற்கான வசதிகள் இதில் இருப்பது சிறப்பம்சம் ஆகும். இந்த மின்விளக்குகள் வாகன ஓட்டிகள் மற்றும் பார்வையாளர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
75-வது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி வடிவில் நேற்று முதல் 2 நாட்களுக்கு மின்ஒளி ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அலங்கார மின்விளக்கு வெளிச்சத்தில் செல்லபாண்டியனார் மேம்பாலம் ஜொலிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ரேவதி பிரபு, மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர்கள் வாசுதேவன், பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தேசியக்கொடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.