கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை நடுங்க வைத்த உறைபனி

கொடைக்கானலில் நிலவும் உறைபனி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நடுங்க வைத்தது.

Update: 2022-12-30 17:28 GMT

கொடைக்கானலில் நிலவும் உறைபனி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நடுங்க வைத்தது.

உறைபனி சீசன்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப சீசன் நிலவும். கோடைகாலத்தில் குளுகுளு சீசனும், பனிகாலத்தில் உறைபனி சீசனும் நிலவும். டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கொடைக்கானலில் உறைபனி சீசன் ஆகும். அந்த வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் உறைபனி நிலவியது. அதன்பிறகு சில நாட்களாக மழை, அடர்ந்த பனிமூட்டம் என மாறிமாறி நிலவி வந்தது. இதன் காரணமாக உறைபனி தாக்கம் குறைந்து காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று கொடைக்கானலில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவில் கடும் குளிரும் நிலவியது. அப்போது வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. இதனால் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் ஏற்பட்டது.

இதற்கிடையே இன்று அதிகாலை கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டது. கடும் குளிர் நிலவியதால் புற்களின் மேல் விழுந்த பனித்துளிகள் அப்படியே உறைந்து உறைபனியாக மாறியது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரியின் நீர்பிடிப்பு பகுதியான கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் உறைபனி காணப்பட்டது. இந்த பகுதிகளில் புற்களின் மேல் விழுந்த பனித்துளிகள் உறைந்துபோனதால் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று காட்சியளித்தது.

நட்சத்திர ஏரி

கொடைக்கானலில் நிலவி வரும் இந்த உறைபனி, பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் நடுங்க வைத்துள்ளது. இருப்பினும் காலை நேரத்திலேயே சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு சென்று உறைபனி சீசனை அனுபவித்து மகிழ்ந்தனர்.

மேலும் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் இரவு முழுவதும் படர்ந்திருந்த பனி, காலையில் கதிரவனின் ஒளி பட்டவுடன் ஆவியாக வான் நோக்கி பறந்த காட்சிகள் ரம்மியமாக இருந்தது. இதனை ஏரிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்