தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; தேசிய நெடுஞ்சாலை ஆணையர் திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் தகவல்
தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையர் திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் ஒய்.ஏ.ராவுத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையர் திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் ஒய்.ஏ.ராவுத் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி இந்திய தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்தது. கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையர் திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் ஒய்.ஏ.ராவுத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி துறைமுகம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதுபோல் தூத்துக்குடி-மதுரை சாலையில் ஸ்டெர்லைட் அருகே உள்ள ெரயில்வே மேம்பாலப்பணி, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணி, தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் புதுக்கோட்டை மேம்பால பணி, வல்லநாடு பாலம் சரிசெய்யும் பணி ஆகியவை விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
வர்த்தகம் அதிகரிக்கும்
மேலும் தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே 315 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இதன் மூலம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். இது சென்னைக்கு ஒரு மாற்று வழிச்சாலையாக அமையும். மேலும் வெளிநாட்டு வர்த்தகம், தொழில்துறை உற்பத்தி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.