பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது

திண்டுக்கல்லில், பேச மறுத்து தொடர்பை துண்டித்ததால் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-14 16:46 GMT

திண்டுக்கல்லை அடுத்த மாலப்பட்டி அன்னை காமாட்சிநகரை சேர்ந்த முருகேசன் மனைவி செல்லமணி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகேசன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மூத்த மகன் திருமணமாகி மனைவியுடன் கோவையில் வசித்து வருகிறார். இதனால் இளையமகனுடன் செல்லமணி வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி செல்லமணி தனது வீட்டில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்லமணியை கொலை செய்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குமரன் திருநகரை சேர்ந்த பிரபு (44) என்பவருக்கும், செல்லமணிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பிரபு, செல்லமணியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததும், பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. மேலும் பிரபு, திண்டுக்கல் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை முடிந்து பிரபு வீடு திரும்பினார். இதற்கிடையே போலீசார் பிரபுவை கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், செல்லமணிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் 2 பேரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம். ஒருகட்டத்தில் செல்லமணியின் கள்ளக்காதல் விவகாரம், அவரது மகன்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் செல்லமணியை கண்டித்தனர். பின்னர் என்னிடம் பேசுவதை அவர் தவிர்த்து, தொடர்பை துண்டித்தார். சம்பவத்தன்று இதுகுறித்து கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து செல்லமணியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தேன். மேலும் நானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்