சிற்றாறு குடியிருப்புக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்: பசுவை கடித்து குதறிய புலியை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை

சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்புக்குள் மீண்டும் புகுந்த புலி கடித்து குதறியதில் காயமடைந்த பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புலி அட்டகாசத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Update: 2023-07-09 17:25 GMT

குலசேகரம்:

சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்புக்குள் மீண்டும் புகுந்த புலி கடித்து குதறியதில் காயமடைந்த பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புலி அட்டகாசத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அச்சுறுத்தி வரும் புலி

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அரசு ரப்பர் கழக சிற்றாறு தொழிலாளர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த குடியிருப்பில் இதுவரை யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடு போன்ற வன விலங்குகள் தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது புலியும் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

கடந்த 3-ந் தேதி முதன்முதலில் தொழிலாளர்கள் ஒரு புலியை பார்த்தனர். பின்னர் 5-ந் தேதி அதிகாலையில் அந்த புலி மோகன்தாஸ் என்பவரின் வீட்டின் அருகில் கட்டியிருந்த ஒரு ஆட்டை அடித்துக்கொன்றதாக கூறப்பட்டது.

இதையடுத்து வனத்துறை சார்பில் அதே நாளில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு புலி நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் கேமராக்கள் வைக்கப்பட்டு 3 நாட்கள் ஆகியும் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

பசுவை தாக்கியது

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொழிலாளி செந்தில் என்ற சுரேஷ்குமார் (வயது45) வீட்டில் தொழுவத்தில் கட்டிருந்த பசுமாடு அலறியது. இதைத்தொடர்ந்து சுரேஷ்குமாரும், அவருடைய தந்தை வடிவேலும் வெளியே வந்து பசுமாட்டை பார்த்தனர். அப்போது பசுவை புலி கடித்து குதறியபடி தூக்கிச் செல்ல முயல்வதை பார்த்து அதிர்ச்சியில் சத்தமிட்டனர். மேலும் பசுவை காப்பாற்ற அதை நோக்கி விரைந்தனர்.

இவர்களை பார்த்ததும் புலி தாவி பாய்ந்து அங்கிருந்து ஓடியது. அப்போது சுரேஷ்குமாரின் கையில் புலியின் நகம் பட்டு கீறல் ஏற்பட்டது. தொடர்ந்து பசுமாட்டை பார்த்த போது அதன் முன்னங்கால் தொடைப் பகுதியில் பலத்த காயமும், கழுத்து பகுதிகளில் கீறல்களும் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குடியிருப்பு பகுதி தொழிலாளர்கள் அங்கே குவிந்தனர்.

வனத்துறையினர் விரைந்தனர்

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த பசுவை பார்த்தனர். மேலும் மக்கள் தைரியமாக இருக்கும்படி நம்பிக்கையை ஊட்டினர். பின்னர் அதிகாலை 4 மணியளவில் வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் அந்த பகுதிக்கு மீண்டும் புலி வந்துள்ளது. அப்போது மக்கள் கூச்சலிட்டதால் புலி அங்கிருந்து தப்பியோடியது. இதனால் பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

பசுமாட்டிற்கு சிகிச்சை

இதற்கிடையே நேற்று புலி தாக்கி காயமடைந்த பசுவுக்கு வனத்துறையின் ஏற்பாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அருமனை கால்நடை மருத்துவர் செபகிலாரி, ஆய்வாளர் ராஜிவ், உதவியாளர் குமரேஷன் ஆகியோர் பசுவுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் புலி வந்து போன பாதையை அறிந்து கொள்ளும் வகையில் நேற்று மதியம் வனத்துறையின் மோப்ப நாய் ஆதித்யா அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் அந்த பகுதியில் கூடுதலாக 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

சிற்றாறு குடியிருப்பு பகுதியை புலி சுற்றி, சுற்றி வருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்