சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

நாகையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-17 18:45 GMT


நாகையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜு, மாவட்ட இணை செயலாளர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அந்துவன் சேரல், வட்ட செயலாளர் அற்புதராஜ், புள்ளியல் சார் நிலை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மதுரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கலெக்டரிடம் மனு

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

காலை உணவு திட்டத்தை, சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து போராட்டக்காரர்கள் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்