கடலில் திசைமாறி சென்ற மீனவர்கள் ஊர் திரும்பினர்

கடலில் திசைமாறி சென்ற பூம்புகார் மீனவர்கள் 7 பேர் கரை திரும்பினர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Update: 2022-09-30 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 25-ந் தேதி பூம்புகாரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் (வயது 25), அஞ்சப்பன்(45), தமிழ்ச்செல்வன்(45), நிலவரசன்(25), கண்ணன்(40), மாசிலாமணி(65), பிரகாஷ் உள்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு எஞ்சின் பழுதடைந்தது. இதனால் அவர்கள் நடுக்கடலில் தவித்தனர். இதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்காக அந்த படகில் இருந்த 7 பேர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் கரைக்கு வந்து மீன்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

திசைமாறி சென்றனர்

அந்த தகவலின்பேரில் மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்கப்பிரிவு போலீசார் இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து இந்திய கடற்படையினர் பழுதடைந்த படகு மற்றும் மீனவர்களை மீட்க கடலுக்கு விரைந்து சென்றனர். ஆனால், கடலில் நீண்டநேரம் தேடியும் அவர்களை காணவில்லை. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடலில் காற்று வேகமாக வீசியதால் அந்த படகு திசைமாறி இலங்கை பகுதிக்கு சென்றதும், அதில் இருந்த மீனவர்களையும், படகையும் இலங்கை கடற்படையினர் மீட்டு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

கண்ணீர் மல்க வரவேற்பு

பின்னர் திசைமாறி வந்த 7 மீனவர்களையும், பழுதடைந்த படகையும், இந்திய கடற்படையிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து நேற்று முன்தினம் பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்