இந்தோனேசியா சிறையில் இறந்த குமரி மீனவர் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலம்; பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
இந்தோனேசியா சிறையில் இறந்த குமரி மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கொல்லங்கோடு,
இந்தோனேசியா சிறையில் இறந்த குமரி மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
குமரி மீனவர்
நித்திரவிளை அருகே உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரிய ஜெசின்தாஸ், மீனவர். இவரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்களும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தமானுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்தோனேசியா கடற்படையினர் படகை சிறைபிடித்தனர். மேலும், அதில் இருந்த மீனவர்களையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் இந்தோனேசியா நாட்டில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் 4 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மரியஜெசின்தாஸ் உள்பட மீதமுள்ள 4 பேர் கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்களை மீட்கக்கோரி குமரியில் மீனவ அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
மருத்துவமனையில் அனுமதி
இந்தநிலையில் சிறையில் இருந்த மரிய ஜெசின்தாசுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சக மீனவர் ஒருவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். 10 நாட்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மரிய ஜெசின்தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அவரது சாவில் மர்மம் இருப்பதாக மரியஜெசின்தாசின் தாயார் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார்.
அடித்துக்கொலை
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரிய ஜெசின்தாசின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மரிய ஜெசின்தாசின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் மரிய ஜெசின்தாசின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மரிய ஜெசின்தாசின் இறப்பிற்கு நியாயம் வேண்டும் என்று அவர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
ஆடியோ வைரல்
இதுதொடர்பாக மரிய ஜெசின்தாசின் சகோதரர் சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், 'மரிய ஜெசின்தாசின் இறப்பிற்கு நியாயம் வேண்டும். அவருடன் இந்தோனேசியா சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வரை சிறையில் வாடும் மீதமுள்ள 3 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டத்தில் நடத்தப்படும்' என்று கூறியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.