'கள ஆய்வு' திட்டத்தின் முதல் நிகழ்ச்சி 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை

கள ஆய்வு திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-02-01 23:14 GMT

சென்னை,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள நேற்று வேலூர் சென்றார். அப்போது காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார்.

அந்த விழாவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2,400 கோடி நிதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.784 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 351 புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்.

அதிகாரிகளுடன் ஆய்வு

அதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்திலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மண்டல ஆய்வு என்பது மாநிலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முன்னோடித்திட்டம். இத்திட்டம் வெற்றி பெற்றால் நீங்களும் வெற்றி பெறுவீர்கள், உங்களுடன் சேர்ந்து நானும் வெற்றி பெறுவேன், நம்முடைய உழைப்பில் இந்த மாநிலமே வெற்றி பெறும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது, புலனாய்வு செய்வது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது ஆகிய மூன்றும் காவல்துறையின் 3 தூண்கள் என்றும், இப்பணிகளில் அதிக பளு இருக்கக்கூடாது என்றால், அதற்கு குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது மிக முக்கியம் என்றும், அந்த அடிப்படையில் "பிரீவெண்டிவ் போலீசிங்" என்பது காவல்துறையின் இதயமும், ஆன்மாவும் போன்றது. இதில் அனைத்து நிலை காவல் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.

தவறு செய்தால் தப்பிக்க முடியாது

காவல்துறை அதிகாரிகள் வழக்கிற்காக மட்டும் போகாமல், சாதாரணமாக அவ்வப்போது கிராமங்களுக்கு சென்று மக்களுடன் பேச வேண்டும், இதை செய்தாலே, சட்டம் ஒழுங்கு பிரச்சினை கிராமங்களில் வராது. இப்படி செய்தால் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழலும் எழாது.

மக்கள்-காவல்துறை சந்திப்புகளை அதிகப்படுத்த வேண்டும். இளைஞர்கள்-பள்ளி-கல்லூரி மாணவர்களையும் சந்தித்து பேசி, சட்டத்தின் ஆட்சி இளைஞர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக்கூறி, அவர்களை இளம்பருவத்திலேயே குற்றச்செயல்கள் பக்கம் போகாமல் தடுத்திட முயற்சிகள் எடுக்க வேண்டும். விளிம்பு நிலை ஏழை, எளிய மக்கள், பெண்கள், உங்கள் உதவி தேடிவரும்போது அவர்களுக்கு துணையாக இருந்து நீதி பெற்றுத்தர வேண்டும்.

எப்.ஐ.ஆர் போட்டுவிட்டால் மட்டுமே பிரச்சினை தீராது. அவற்றில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்து வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அச்சம் வரும். இந்த ஆட்சியில் தவறு செய்தால் தப்பிக்க முடியாது என்ற பயம் வரும்.

நோக்கம் வெற்றி பெறும்

விழிப்புணர்வு பணிகளில் மாவட்ட கலெக்டரோடு இணைந்து பணிகளை மேற்கொள்வதன் மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள இயலும். காவல்துறை என்ற குடும்பத்தில் மாவட்டத்தின் எஸ்.பி.தான் தலைவர் என்ற நினைப்பில் செயல்பட வேண்டும். தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் நிம்மதியாக, நேர்மையாக பணியாற்ற வழிசெய்தாலே மாவட்டத்தில் அமைதி நிலவும். சட்டத்தின் ஆட்சி எவ்வித சிரமும் இன்றி நிலைநாட்டப்படும்.எனவே, முதலில் குறிப்பிட்டதைப் போல காவல்துறையின் மூன்று தூண்களையும் கட்டிக்காப்பாற்றினாலே உங்கள் மாவட்டம் சிறக்கும். இந்த மண்டல ஆய்வின் நோக்கமும் வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு, கலெக்டர்கள் பெ.குமாரவேல் பாண்டியன், பா.முருகேஷ், அமர் குஷ்வாஹா, தெ.பாஸ்கர பாண்டியன், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் என்.கண்ணன், வேலூர் சரக காவல் துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டுகள் எஸ்.ராஜேஷ் கண்ணன், தீபா சத்யன், கே.கார்த்திகேயன், கே.எஸ்.பாலகிருஷ்ணன், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்