3 மாவட்ட கலெக்டர்களுக்கு பெண் குழந்தை பாதுகாப்பு தின விருது முதல்-அமைச்சர் வழங்கினார்

பெண் குழந்தை பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த 3 மாவட்ட கலெக்டர்களுக்கு பெண் குழந்தை பாதுகாப்பு தின விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-06-16 21:21 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோவை, தஞ்சை மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டு பத்திரங்களையும் வழங்கி சிறப்பித்தார்.

பாலின விகிதம்

மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை என்ற பெயரை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என மாற்றம் செய்துள்ளது. பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த 3 மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

3 மாவட்ட கலெக்டர்கள்

அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்த பெருமுயற்சிகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சிறப்பாக செயலாற்றிய கோவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஜி.எஸ்.சமீரனுக்கு தங்கப்பதக்கமும்,

தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு வெள்ளிப்பதக்கமும், கரூர் கலெக்டர் டாக்டர் த.பிரபுசங்கருக்கு வெண்கலப்பதக்கமும் மற்றும் பாராட்டு பத்திரங்களையும் முதல்-அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர் வே.அமுதவல்லி,

சமூகநல இயக்குனர் த.ரத்னா, சமூக பாதுகாப்பு இயக்குனர் ச.வளர்மதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்