குமரியில் தீபாவளி பண்டிகை 'களை' கட்டியது

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை ‘களை’ கட்டியதால், கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-16 21:06 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை 'களை' கட்டியதால், கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி பண்டிகை. தீபாவளியன்று புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். மேலும் வீட்டில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்து அண்டை வீட்டாருடன் பகிர்ந்து சாப்பிடுவார்கள். இப்படி சிறப்பு மிகுந்த தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் புத்தாடை வாங்கவும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

'களை' கட்டியது

இதனால் குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை 'களை' கட்டியுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்குவதற்காக கடை கடையாக ஏறி இறங்குகிறார்கள். இதன் காரணமாக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. முக்கியமாக நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் அதிகளவு மக்கள் கூட்டம் இருக்கிறது.

அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானவர்கள் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவில் மாநகரை பொறுத்த வரையில் செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதி, செட்டிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

போக்குவரத்து நெரிசல்

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்ததால் நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. வடசேரி ஆராட்டு ரோடு, கேப் ரோடு, ஒழுகினசேரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்தபடி சென்றன.

கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால், அதை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களுக்கு அடிக்கடி போலீசார் ரோந்து சென்று, கண்காணித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

1,200 போலீசார்

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் ரெயில் நிலையங்கள், ரெயில்வே பாலங்களிலும் போலீசார் சோதனை நடத்த இருக்கிறார்கள். கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவாமல் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்