தந்தையின் 2-வது மனைவி சரமாரி வெட்டிக்கொலை

கடமலைக்குண்டு அருகே, தந்தையின் 2-வது மனைவியை வெட்டிக்கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-18 01:15 IST

2-வது திருமணம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மணலாத்துக்குடிசை கிராமத்தை சேர்ந்தவர் வேல்பாண்டி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பழனியம்மாள். இந்த தம்பதிக்கு கருப்பையா (வயது 30), ரவிக்குமார் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த கணவரை இழந்த ஜோதி (40) என்பவருடன் வேல்பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேல்பாண்டி ஜோதியை 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வேல்பாண்டி, ஜோதியுடன் கேரள மாநிலத்துக்கு சென்றார்.

மணலாத்துக்குடிசை கிராமத்தில் பழனியம்மாள் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இதில் இளைய மகன் ரவிக்குமார் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.

சரமாரி வெட்டிக் கொலை

இந்நிலையில் கேரளாவில் வசித்து வந்த வேல்பாண்டி-ஜோதி தம்பதியினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு வந்தனர். அங்கு உள்ள ஒரு தென்னந்தோப்பில் தங்கி கூலி வேலை செய்தனர்.

இவர்கள், இங்கு வசிப்பதை கேள்விப்பட்ட வேல்பாண்டி மகன் ரவிக்குமார் நேற்று மதியம் தென்னந்தோப்புக்கு சென்றார்.

அங்குள்ள வீட்டில் ஜோதி மட்டும் தனியாக இருந்தார். அவரை கண்டதும் ரவிக்குமார், 'என் அம்மா பழனியம்மாளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு நீ மட்டும் சந்தோசமாக வாழ்கிறாயா?' என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

மேலும் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதியை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து மற்றும் தலையில் வெட்டுப்பட்ட ஜோதி அலறினார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக இறந்தார்.

கைது

இதற்கிடையே ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு, தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த வேல்பாண்டி ஓடி வந்தார். அப்போது ஜோதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு தப்பியோட முயன்ற ரவிக்குமாரை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், இறந்த ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் 2-வது மனைவியை தொழிலாளி தீர்த்து கட்டிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்