ராயக்கோட்டை அருகே பயங்கரம்: சொத்து பிரச்சினையில் விவசாயி வெட்டிக்கொலைஉறவினருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2023-08-18 19:45 GMT

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள மொள்ளம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற கூலுவகுத்தான் (வயது 75). விவசாயி. இவருக்கு 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். அனைவரும் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மேலும் தனிதனியாக விவசாயம் செய்து வந்தனர். மாரியப்பனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாரியப்பன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் கோவிந்தராஜ் (39) ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில், ராயக்கோட்டை அருகே உள்ளுகுறுக்கை பக்கமுளள நல்லராலப்பள்ளியில் விவசாய நிலத்தில் கை, கால்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது காணாமல் போன மாரியப்பன் என்று தெரிய வந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. மர்ம நபர்கள் அவரை கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து போலீசார், விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினருக்கு வலைவீச்சு

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாரியப்பனை, அவரது தம்பி சின்னகண்ணுவின் மருமகன் மணி (35) என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததும், மணி தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட மாரியப்பன் குடும்பத்திற்கு நிலம் அதிகமாக உள்ளது. அவை பாகப்பிரிவினை செய்யப்படவில்லை.

இதனால் சொத்து பிரச்சினை காரணமாக அவரை மணி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணியை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை மறியல்

இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாரியப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ராயக்கோட்டை போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலையாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராயக்கோட்டை அருகே சொத்து பிரச்சினையில் விவசாயி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்