17 டன் சின்னவெங்காயத்தை விற்க முடியாமல் விவசாயி கவலை
விலை வீழ்ச்சியால் 17 டன் சின்னவெங்காயத்தை விற்க முடியாமல் விவசாயி கவலை இழப்பீடு வழங்க கோரிக்கை
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 57). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார். இவர் பெரம்பலூரில் இருந்து 1½ டன் வெங்காயத்தை வாங்கி வந்து நடவு செய்தார். அவர் எதிர்பார்த்தபடியே நல்ல விளைச்சலும் கிடைத்தது. இதையடுத்து சின்னவெங்காயத்தை அறுவடை செய்து விழுப்புரம் சந்தைக்கு கொண்டு சென்றார். ஆனால் சந்தைகளில் சின்னவெங்காயத்தின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. கிலோ வெறும் 10 ரூபாய்க்கு விற்றதால் சின்னவெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல் கவலையுடன் அதனை நிலத்துக்கே கொண்டு வந்து விட்டார்.
இதுகுறித்து விவசாயி சங்கர் கூறுகையில், வெங்காயம் வாங்கிய செலவு, லாரி வாடகை, களையெடுத்தல், பராமரிப்பு பணி என சின்னவெங்காய சாகுபடிக்காக குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன். இதற்கு பலனாக விளைச்சலும் அமோகமாக கிடைத்தது. ஆனால் சந்தையில்தான் வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு வாங்குகிறார்கள். ஒரு கிலோ 50, 60 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டால்கூட பரவாயில்லை, ஆனால் 10, 15 ரூபாய்க்கு கேட்டவுடன் நான் மிகவும் மனம் நொந்துவிட்டேன். 2 ஏக்கர் நிலத்தில் 17 டன் சின்னவெங்காயம் விளைந்துள்ள நிலையில் நல்ல விலைக்கு போகாததால் எனக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை என்னுடைய பண்ணையில் கொட்டி வைத்துள்ளேன். இதை தோட்டக்கலைத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீட்டுத்தொகை தர வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.