கதண்டு கடித்து விவசாயி பலி

வடகாட்டில் கதண்டுகள் கடித்து விவசாயி பலியானார். 10-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2023-09-20 18:35 GMT

கதண்டுகள் கடித்தன

வடகாடு தெற்குப்பட்டி பகுதியில் துரைக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ெதன்னை மரங்களில் தேங்காய் வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் கலைந்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் ஆடு, மாடுகளையும் கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கதண்டுகள் கடித்தவர்களை மீட்டு வடகாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆலங்குடி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவமனையில் இருந்தவர்கள் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

விவசாயி பலி

மேலும் சிலர் உறவினர்கள் உதவியுடன் வாகனங்களில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆலங்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வடகாடு முஸ்லிம் பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயி கம்ருதீன், அவரது மனைவி ஆகிய 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கம்ருதீன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்