கவிழ்ந்த பஸ்சின் அடியில் சிக்கி ஊழியர் பலி
பஸ் கவிழ்ந்ததில், அதன் அடியில் சிக்கி ஊழியர் உயிரிழந்தார். 20 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்
காரைக்குடி
பஸ் கவிழ்ந்ததில், அதன் அடியில் சிக்கி ஊழியர் உயிரிழந்தார். 20 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்
தனியார் பஸ்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து காரைக்குடி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை மானாமதுரையை சேர்ந்த டிரைவர் செல்வம் ஓட்டினார்.
கண்டக்டராக இளையான்குடியை சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் 48 பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் பஸ் குன்றக்குடியை கடந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் காரைக்குடி- மதுரை 4 வழிச்சாலைக்கான பணி நடைபெற்று வருகிறது. இதனால் மாற்றுப்பாதை போடப்பட்டிருந்தது.
படுகாயம்
அந்த பாதையில் வந்த பஸ் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆர்.டி.ஓ. பால்துரை, தாசில்தார் தங்கமணி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், குன்றக்குடி இன்ஸ்பெக்டர் தேவகி. சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலி
பின்னர் கிரேன் மூலம் பஸ் மீட்கப்பட்டபோது, அதே பஸ்சில் கண்டக்டரின் உதவியாளராக பணியில் இருந்த மதுரையை சேர்ந்த சிவா (வயது 22) என்பவர், பஸ்சின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
சிவாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை மாங்குடி எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.