விருத்தாசலத்தில்மின்மாற்றியில் ஏறி பட்டம் எடுத்த மாணவன் மீது பாய்ந்த மின்சாரம்மருத்துவமனைக்குள் தூக்கி வீசியதால் பரபரப்பு

விருத்தாசலத்தில் மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை மின்மாற்றியில் ஏறி எடுக்க முயன்ற மாணவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மருத்துவமனைக்குள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-29 19:41 GMT

விருத்தாசலம், 

அரையாண்டு விடுமுறை

விருத்தாசலம் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். பொக்லைன் ஆபரேட்டர். இவரது மகன் சசிதரன் (வயது 14). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது, அரையாண்டு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான்.

இந்த நிலையில், நேற்று சசிதரன் அந்த பகுதியில் பட்டம் பறக்க விட்டு விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென பட்டத்தின் நூல் அறுந்து போனது.

மின்சாரம் தாக்கியது

இதையடுத்து பறந்து சென்ற அந்த பட்டத்தை பிடிக்க, அவன் பின் தொடர்ந்து ஓடினான். அந்த பட்டத்தின் நூல் பகுதி விருத்தாசலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள மின்மாற்றியில் உள்ளமின்கம்பியில் சிக்கிக் கொண்டு பறந்தது. இதையடுத்து, அதை எடுக்கும் ஆர்வத்தில் மின்மாற்றி மீது சசிதரன் ஏறியதாக தெரிகிறது. அப்போது, அவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் சிறுவன் விழுந்தான். உடனே துடிதுடித்து கதறிய சிறுவனின் அபாயகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடோடி சென்று பார்த்தனர்.

தீவிர சிகிச்சை

பின்னர், அவனை மீட்டு மருத்துவமனைக்குள் கொண்டு சென்றார்கள். அங்கு அவனுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சசிதரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்