மக்களை அடைத்து வைப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது;பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

மக்களை அடைத்து வைப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-02-19 21:28 GMT

மக்களை அடைத்து வைப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

வென்ற தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம், திருநகர் காலனி, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ்.நகர், கிருஷ்ணா தியேட்டர், வி.வி.சி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

முன்னதாக அவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் பொதுமக்களிடையே பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றாம் எண் பெத்தானை அழுத்தி முரசு சின்னத்தில் வாக்களித்து எஸ்.ஆனந்தை வெற்றி பெற வைத்து சரித்திரத்தில் இடம் பிடிக்க வைக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் தே.மு.தி.க. வென்ற தொகுதி ஆகும். தே.மு.தி.க. என்ற கட்சியை ஆரம்பிக்க போகிறோம் என்று விஜயகாந்த் அறிவித்தது பெரியார் பிறந்த மண்ணான இந்த ஈரோட்டில் தான்.

விவசாய கடன் தள்ளுபடி

இங்கு ஜவுளி பூங்கா இல்லை, சாலை, மின்விளக்கு வசதி இல்லை, மாநகராட்சிக்குரிய தரம் இல்லை. மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று நமது வேட்பாளர் இன்னும் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. எனவே நீங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். தி.மு.க. வினர், அ.தி.மு.க.வினரை திட்டுகிறார்கள். அ.தி.மு.க. வினர், தி.மு.க.வினரை திட்டுகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.

மக்களை வஞ்சிக்க கூடியவர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள். 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுகிறார்கள். டாஸ்மாக் கடையை ஒழிப்போம் என்றார்கள் ஒழித்தார்களா? நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கி தருவோம் என்றார்கள் கொடுத்தார்களா? பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கொடுப்பேன் என்றார்கள் கொடுத்தார்களா? விவசாயிகளின் விலை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வேன் என்று கூறினார்கள் செய்தார்களா? விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள் செய்தார்களா? எந்த பொருட்களின் விலையும் உயராது என்று கூறினார்கள். ஆனால் இன்று பால் விலை, மின்கட்டணம் உயர்வு, குப்பை வரி என்று எல்லா வரிகளும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

அடிமைகள் போல்

இதனால் இந்த தேர்தலில் நீங்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கொங்கு மண்டலத்தை சார்ந்தவர்கள் அறிவாளிகள், சிந்திக்க கூடியவர்கள். எனவே நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்றால் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தமிழகத்தின் முதன்மை தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியை கொண்டு வருவார்.

டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றி அமைப்பார். குப்பை வரி, வீட்டு வரி, பால் விலை உயர்வு, நூல் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பார். வாக்குக்கு ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் கொடுப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்வோம் என்று யாராவது கூறுகிறார்களா? மக்களை அடைத்து வைத்து அடிமைகள் போல் நடத்துவது வேறு எந்த தேர்தலிலும் நடைபெறவில்லை. இதை மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே வருகிற 27-ந் தேதி நீங்கள் நல்ல யோசித்து யார் நல்லது செய்வார்கள் என்று சிந்தித்து வாக்களியுங்கள்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்