குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் வனத்துறையினரின் முயற்சி தோல்வி
மனிதர்களுடன் பழகியதால் குட்டியை கூட்டத்தில் சேர்க்க யானைகள் மறுக்கின்றன.
கோவை,
கோவையை அடுத்த மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டுயானை எழுந்து நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. அதன் அருகில் ஆண் குட்டி யானை சுற்றி வந்தது. இதை அறிந்து சென்ற வனத்துறையினர் அந்த பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து உடல் நலம் தேறியதும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் தாயுடன் சேராமல் குட்டியானை பிரிந்து வந்தது. அந்த குட்டியானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் அட்டுக்கல் வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயன்றபோது, குட்டியை நிராகரித்து தாய் யானை விலகி சென்றது. இதனால் தாயுடன் குட்டியை சேர்க்கும் பணி தோல்வி அடைந்தது.
இதையடுத்து குட்டி யானையை வாகனம் மூலம் மருதமலை யானை மடுவு வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு வேறு காட்டு யானைகள் கூட்டத்துடன் அதனை சேர்க்க முயன்றனர். ஆனால் அந்த யானைகள், குட்டியை தங்களுடன் சேர்க்காமல் விரட்டி விட்டன. இதனால் குட்டி யானையை மருதமலை வனத்துறையினர் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றனர். அது வனத்துறையினரிடமும், பொதுமக்களிடமும் நன்றாக பழகி விட்டது. மனிதர்களுடன் பழகி விட்டதால்தான் குட்டியை ஏற்க காட்டு யானைகள் மறுப்பதாக கூறப்படுகிறது.