பஸ் மீது செங்கல்லை வீசிய போதை ஆசாமி
இரவு நேரத்தில் நிற்காமல் சென்ற ஆத்திரத்தில் பஸ் மீது செங்கல்லை வீசிய போதை ஆசாமி சிக்கினார்.
தக்கலை:
இரவு நேரத்தில் நிற்காமல் சென்ற ஆத்திரத்தில் பஸ் மீது செங்கல்லை வீசிய போதை ஆசாமி சிக்கினார்.
பஸ் மீது செங்கல் வீச்சு
தக்கலை பஸ் நிலையத்தின் முன்புற வாசலில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் அந்த வழியாக பஸ் வந்தது. ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து பஸ்ைச நோக்கி வீசியுள்ளார். ஆனால் அந்த பஸ் மீது செங்கல் படவில்லை. எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரள பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் விழுந்தது. இதில் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போதை ஆசாமி சிக்கினார்
உடனே பயணிகள் அந்த நபரை பிடித்து தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த நபர் என்பது தெரியவந்தது.
பஸ்சை நிறுத்தாமல் சென்ற ஆத்திரத்தில் செங்கல்லை வீசியதாகவும், ஆனால் அந்த செங்கல் வேறுஒரு பஸ் மீது விழுந்து விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
அதே சமயத்தில் சேதமடைந்த கண்ணாடிக்குரிய தொகையை தந்து விடுவதாக போதை ஆசாமி தெரிவித்தார். இதற்கு கேரள பஸ் டிரைவர் சம்மதம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போதை ஆசாமியை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.