அரசு பஸ்சை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர்
பிரேக் பிடிக்காமல் நடுவழியில் பழுதடைந்ததால் பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அரசு பஸ்சை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழி:
பிரேக் பிடிக்காமல் நடுவழியில் பழுதடைந்ததால் பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அரசு பஸ்சை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்
நாகர்கோவில் வடசேரியில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று காலை 7.10 மணியளவில் ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை மேலசங்கரன்குழியை சேர்ந்த ஞான பெர்க்மான்ஸ் (வயது47) என்பவர் ஓட்டி சென்றார். அதில் நடத்துனர் மற்றும் 18 பயணிகள் இருந்தனர்.
அந்த பஸ் பணகுடியை கடந்து சென்ற போது பிரேக் சரிவர பிடிக்காமல் வலது பக்கமாக இழுத்து சென்றது. இதனால் பயணிகள் நலன்கருதி டிரைவர் பஸ்சை தொடர்ந்து இயக்காமல் நடுவழியில் நிறுத்தினார். தொடர்ந்து பயணிகளை இறக்கி மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி விட்டார்.
பின்னர் பஸ்சை சரி செய்ய வள்ளியூரில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு ஓட்டி சென்றார். அங்கு பணியில் இருந்தவர்கள் பஸ்சை ஓரளவு சரி செய்தனர். தொடர்ந்து டிரைவர் பஸ்சை இயக்கிய போது, முன்பு வலது பக்கமாக இழுத்த பஸ் தற்போது இடது பக்கமாக இழுத்தது.
வட்டார போக்குவரத்து அலுவலகம்
இதுகுறித்து டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் நாகர்கோவில் ராணித்தோட்டம் போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், 'பஸ்சை பணிமனைக்கு கொண்டு வாருங்கள்' என கூறினர். ஆனால் பஸ்சில் தொடர்ந்து கோளாறு ஏற்பட்டு வந்ததால் விரக்தி அடைந்த டிரைவர் பஸ்சை பணிமனைக்கு கொண்டு செல்லாமல், விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
அங்கு இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் பஸ்சை ஒப்படைத்துவிட்டு நடந்த சம்பவங்களை மனுவாக எழுதி கொடுத்தார். உடனே அங்கு இருந்த அதிகாரி ஊழியர்கள் மூலம் பஸ்சை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.
இதற்கிடையே போக்குவரத்து அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் டிரைவர் மூலம் பஸ்சை பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
முடிவு கிடைக்கட்டும்
இதுகுறித்து டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் கூறும்போது, 'இந்த பஸ்சின் நிலை குறித்து கடந்த 15 நாட்களாக பணிமனையில் தகவல் தெரிவித்துள்ளேன். ஆனால், பஸ் பிரேக் பிடிக்காமல் ஒரு பக்கமாக இழுத்து செல்கிறது. ஏதாவது நடந்துவிட்டால் பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டரின் நிலை என்ன?. பஸ்சை சரி செய்ய வள்ளியூர் பணிமனைக்கு கொண்டு சென்றால் அவர்கள் இங்கே ஏன் கொண்டு வந்தீர்கள் என்கிறார்கள். இதனால் இதற்கு ஒரு முடிவு கிடைக்கட்டும் என்றுதான் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தேன்' என்றார்.
நடு வழியில் பழுதடைந்த அரசு பஸ்சை டிரைவர் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.