மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நள்ளிரவில் தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா

மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நள்ளிரவில் தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2022-06-29 19:47 GMT


திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து காந்திமார்கெட் செல்லும் மேல புலிவார்டு சாலையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை குழாய்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த சாலையில் ஆங்காங்கே மண் குவியலாக உள்ளன. பணிகள் முடிந்த இடத்திலும் சாலை சீரமைக்கப்படவில்லை. அதன்காரணமாக வாகனங்கள் செல்லும் போது, புழுதி பறக்கிறது. இதனால் பொதுமக்களும், அந்த பகுதியில் உள்ள வர்த்தகர்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதே மேலபுலிவார்டு சாலையில் தான் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வின் அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் இந்த சாலையை விரைந்து சரிசெய்யும்படி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வை சேர்ந்த இனிகோ இருதயராஜ் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு எம்.எல்.ஏ. தனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது வரை அந்த சாலை சரிசெய்யப்படவில்லை. இதனால், எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் வந்த தி.மு.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் சாலையின் நடுவில் திடீரென நாற்காலிகளை போட்டு உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த மாநகரர்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் சாலையை சீரமைப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்