கிணற்றில் பிணமாக கிடந்த காசாளர்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காசாளர் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-16 16:26 GMT

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காசாளர் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசாளர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா எடக்கல் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 52). இவரது மனைவி மீனாட்சி (50). இவர்களுக்கு விக்னேஷ் (27), ஸ்ரீதர் (16) என 2 மகன்களும், அபிராமி (23) என்ற மகளும் உள்ளனர்.

தென்கருபலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வீராசாமி காசாளராக பணியாற்றினார். இந்த நிலையில் முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விவசாய நிலம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கிணற்றில் பிணம்

இந்த நிலையில் கிணற்றின் அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் கிடந்தது. இதனால் கிணற்றில் பார்த்த போது வீராசாமியின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அப்போது வீராசாமியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம் இருந்தது. இதனையடுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீராசாமியின் மனைவி மீனாட்சி வாணாபுரம் போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மேலும் 5 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அடித்துக்கொலை?

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீராசாமியை நிலத்தகராறில் யாராவது அடித்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்