பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

பொன்னானி-குன்றில்கடவு இடையே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-10-26 18:45 GMT

பந்தலூர், 

பொன்னானி-குன்றில்கடவு இடையே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சாலையில் விரிசல்

பந்தலூர் தாலுகா பொன்னானி அருகே குன்றில்கடவு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் பொருட்கள் வாங்கவும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பொன்னானிக்கு வந்து தான் செல்ல வேண்டும். அப்பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொன்னானி பெரியபாலம் அருகே இருந்து குன்றில்கடவு பகுதிக்கு செல்லும் சாலை தனியார் தேயிலை தோட்டம் வரை சீரமைக்கப்பட்டது. ஆனால், இந்த சாலை தரமாக சீரமைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் நாளுக்குள் நாள் சாலையோரத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சிமெண்ட் சாலை பெயர்ந்து காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

மேலும் சாலை முற்றிலும் சேதமடையும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, இணைப்பு சாலை துண்டிக்கப்படும் நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

குன்றில்கடவு பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் பொன்னானி வரை சிமெண்ட் சாலையில் நடந்து சென்று வருகின்றனர்.

சாலை தரமான முறையில் சீரமைக்கப்படாததால், பெயர்ந்து பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அவசர நேரத்துக்கு கர்ப்பிணிகள், நோயாளிகள் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, நீரோடையை ஒட்டி தடுப்புச்சுவர் அமைப்பதுடன், பழுதடைந்த சாலையை தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்