பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

பந்தலூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-08-09 14:57 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குண்டும், குழியுமாக மாறியது

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே அட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் அவசர தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கொளப்பள்ளி பஜாருக்கு வந்து செல்கின்றனர். அங்கிருந்து அரசு மேல்நிலை பள்ளி செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே முதல் அட்டி குடியிருப்பு வரை செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

ஏற்கனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாலை மோசமாக பெரிய குழிகளாக மாறி உள்ளது. அதில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அவசர தேவைக்காக செல்லும் வாகனங்கள், ஆட்டோக்கள், ஆம்புலன்சுகள் பழுதடைந்து நடுவழிவில் நின்று விடுகிறது.

சீரமைக்க வேண்டும்

இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் தண்ணீரை அடித்து செல்வதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை கோவில் வரை நடக்க வைத்தோ அல்லது சுமந்தோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பழுதடைந்த சாலையால் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. குண்டும், குழியுமான சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். அந்த வழியாக பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கவும், கூலி வேலைகளுக்கும் நடந்து செல்கின்றனர். மோசமான சாலை காரணமாக ஆட்டோக்கள் கூட வர முடியவில்லை. எனவே, கொளப்பள்ளியில் இருந்து அட்டிக்கு செல்லும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். அப்போது தான் சாலை பழுதடைவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்