பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

பந்தலூர்-அட்டிவயல் இடையே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-06-26 12:52 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே அட்டி காலனி, அட்டிவயல் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம் வழியாக செல்ல சாலை உள்ளது. அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் மக்கள், தாலுகா அலுவலகம், ஆஸ்பத்திரி செல்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். குண்டும், குழியுமான சாலையால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையோரத்தில் நடந்து செல்ல முடியாத அளவுக்க பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பந்தலூரில் இருந்து அட்டிவயல் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவது சிரமமாக உள்ளது. சில நேரங்களில் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்