முதியவரை சேலத்துக்கு அனுப்பி வைத்த சுங்கச்சாவடி ஊழியர்கள்
சென்னைக்கு வேலைக்கு சென்றபோது வழி தவறிய முதியவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் சேலத்துக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் முதியவர் ஒருவர் அழுக்கு வேட்டி, சட்டையுடன் தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை அழைத்து விசாரித்து உள்ளனர். அதில் அந்த முதியவர் பெயர் பழனிச்சாமி (வயது 73) என்பதும், சேலம் தாவடிகானூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நண்பர்களுடன் சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
சென்னைக்கு சென்றதும் வழிதவறி, உடன் வந்தவர்களிடம் இருந்து பிரிந்துள்ளார். அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியாததால் மீண்டும் சேலத்துக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் பணம் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்தே வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் பழனிச்சாமியை குளிக்க வைத்து, புதிய வேட்டி, சட்டை எடுத்து கொடுத்து, சேலம் பஸ்சில் ஏற்றி டிக்கெட் எடுத்து, சேலத்தில் பத்திரமாக இறக்கிவிடுமாறு கண்டக்டரிடம் கூறி அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.