கோவில் நிர்வாகியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை மற்றொரு வாலிபருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
கோவில் நிர்வாகியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கடலூர் அருகே காரணப்பட்டு முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவருடைய மகன் சாமிநாதன் (வயது 41). இவர் அப்பகுதி முருகன் கோவில் நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த நடராஜன் மகன் தொழிலாளி முத்துக்கிருஷ்ணன் (40) என்பவருக்கும் கோவில் பொது பணத்தை வசூல் செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 25.7.2013 அன்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்கிருஷ்ணன், அதே ஊரை சேர்ந்த விநாயகம் மகன் கோபாலகிருஷ்ணன், சிங்கிரிகுடியை சேர்ந்த மாயவன் மகன் மகேஷ் (36) ஆகிய 3 பேரும் சேர்ந்து சாமிநாதனை இரும்பு குழாயால் தாக்கி கொலை முயற்சி செய்தனர்.
7 ஆண்டு சிறை
இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது பற்றிய புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், மகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி லிங்கம் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், முத்துக்கிருஷ்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும், மகேசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் கோபாலகிருஷ்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அருணாசலம் ஆஜரானார்.