படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

ஊட்டி அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-02-28 18:45 GMT

ஊட்டி

ஊட்டி அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பஸ் கவிழ்ந்து விபத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த காரப்பிள்ளு கிராமத்தில் இருந்து தொரையட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் காலை தனியார் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் தொரையட்டி கிராமத்திற்கு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறுவதற்காக சென்று கொண்டிருந்தனர்.

காவியலோரை பகுதியில் சென்றபோது எதிரில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. குறுகலான சாலை என்பதால் பஸ்சை சாலையோரம் நிறுத்துவதற்காக டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது பிரேக் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இறங்கி, அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது.

பெண் சாவு

இந்த சம்பவம் குறித்து அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (கூடுதல் பொறுப்பு) கண்மணி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் காரபிள்ளு பகுதியை சேர்ந்த பாஞ்சாலி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக பாஞ்சாலி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து தேனாடு கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

----

Reporter : R.Thangapandi_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

Tags:    

மேலும் செய்திகள்