கிரேன் அறுந்து விழுந்து தொழிலாளி சாவு

ஆத்தூர் அருகே கிணறு தூர்வாரும் பணியின் போது கிரேன் அறுந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-03 18:45 GMT

ஆத்தூர்

தூர்வாரும் பணி

ஆத்தூர் அருகே களரம்பட்டி வடக்குகாடு பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன். இவருக்கு சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றில் மேற்கு காலனியை சேர்ந்த ராஜா (வயது 40) என்பவர் உள்பட 4 பேர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கிரேன் மூலம் ராஜா கிணற்றுக்குள் இறங்கியதாக தெரிகிறது. திடீரென கிரேனின் கம்பி அறுந்தது. அப்படியே ராஜா கிரேனுடன் சேர்ந்து கிணற்றுக்குள் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், கிணற்றுக்குள்ளே கிடந்து அபய குரல் எழுப்பினார்.

பரிதாப சாவு

அவருடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை தூக்கிக்கொண்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ராஜா பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜா மனைவி கலையரசி மல்லியகரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிணறு தூர்வாரும் பணியின் போது கிரேன் அறுந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்