போடிப்பட்டி,
பசி, தாகம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவான உணர்வு..ஆனால் வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடாவிட்டாலும் பரவாயில்லை. பசி, தாகத்தால் வாடும் உயிர்களுக்கு உணவு தண்ணீர் வழங்கலாம். தங்கள் வீட்டு மொட்டை மாடியில் சிறிதளவு தானியங்கள் மற்றும் தண்ணீர் வைத்து பறவைகளுக்கு உணவளிக்கலாம். வீட்டின் முன் சிறிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைப்பதன் மூலம் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளின் தாகம் தீர்க்கலாம். ஆனால் அதுபோன்ற மனிதாபிமானச்செயல்கள் அருகிப்போய் விட்டன. இந்த நிலையில் குப்பையில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு விட்டு தாகத்துடன் சுற்றிய பசுக்களுக்கு, இந்த தெரு குழாய் தண்ணீர் கொடுத்து தாகம் தீர்க்கிறதோ?. குழாயில் சிறிதளவே கொட்டும் தண்ணீர் தரையைத்தொடும் முன்பாக ஒரு சொட்டு கூட வீணாக்காமல் நாக்கால் ரசித்துக்குடிக்கும் பசுக்களைப்பார்க்கும் போது அவற்றின் தாகம் தெரிகிறது. தெரு குழாயை மறதியாய் திறந்து வைத்து விட்டுப்போனதால் தண்ணீர் வீணாகிறதே என்று திட்டு வாங்குவதற்குப்பதிலாக, புண்ணியவதி பட்டம் கொடுத்து அந்த பெண்ணுக்கு நன்றி சொல்கிறதா இந்த பசுக்களின் கண்கள்..!!! முடிந்தவரை பிற உயிர்களின் பசி தாகம் தீர்க்க உதவுங்கள் என்று நமக்கு பாடம் சொல்கிறதோ இந்த பசுக்கள்...!!!