கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குவதல் நடத்திய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

Update: 2022-06-15 13:39 GMT

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குவதல் நடத்திய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல்

கோவை காந்திபுத்தில் உள்ள எல்லன் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் உரிமையாளர் டாக்டர் ராமச்சந்திரன் அந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த மருத்துவர் உமாசங்கருக்கு வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து இருந்தார். இதையடுத்து சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டு சிலர் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி, மருத்துவமனையை அபகரித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டாக்டர்கள் உள்பட 5 பேர் கைது

இதற்கிடையில் ராமச்சந்திரன் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் உமாசங்கர் மற்றும் அவருடைய மேலாளர் மருதவான் ஆகியோர் தனது மருத்துவமனையை அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்பட்டிருந்தது. இதன்பேரில், உமாசங்கர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், உமாசங்கர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரத்தினபுரி போலீஸ் நிலைத்தில் ராமச்சந்திரன் அளித்தது பொய் புகார் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் ராமச்சந்திரன், டாக்டர் காமராஜ், மூர்த்தி, முருகேசன், பழனிச்சாமி ஆகிய 5 பேரை சி.பி.சிஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கைதான 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்காக டாக்டர் ராமச்சந்திரன் உள்பட 5 பேரும் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் 5 நாட்கள் மட்டும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் அனுமதி அளித்தார். மேலும் தினமும் மாலை அரை மணிநேரம் வக்கீல்கள் சந்தித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

ஜாமீன் மனு தள்ளிவைப்பு

இதனிடையே 5 பேரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் நேற்று நடைபெற்றது. அப்போது ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்