வரி வசூலிப்பில் முழுமையாக ஈடுபட்டு மாநகராட்சி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்
ேசலம் மாநகர பகுதியில் வரி வசூலிப்பில் முழுமையாக ஈடுபட்டு மாநகராட்சி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
ேசலம் மாநகர பகுதியில் வரி வசூலிப்பில் முழுமையாக ஈடுபட்டு மாநகராட்சி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் வரி மற்றும் நிதிநிலைக்குழு ஆய்வு கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சிக்கான மொத்த வரி வருவாய் எவ்வளவு? இதுவரை வசூலித்த தொகை மற்றும் குடியிருப்புகளுக்கான வரி, வணிக நிறுவனங்களுக்கான வரி, தொழில்வரி, சொத்து வரி, குடிநீர் வரி, காலிமனைகள் வரி, கல்வி நிறுவனங்களுக்கான வரி, அரசு அலுவலக கட்டிடங்களுக்கான வரி மற்றும் குத்தகை இனங்களுக்கான வரி போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
வரிவசூல் முக்கியம்
மாநகராட்சிக்கு அதிக தொகை வரி செலுத்துபவர்களை கண்டறிந்து அந்த வரியை வசூலிப்பதில் வரி வசூலிப்பவர்கள் ஈடுபட வேண்டும். வரி வசூலிப்பவர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எய்தப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். வரி விதிக்காத வணிக நிறுவனங்களை கண்டறிந்து சட்ட திட்டங்களுக்குட்பட்ட முறையான வரி விதிப்பினை செய்திட வேண்டும்.
வரி வசூல் இனங்களை முறைப்படுத்தி வசூல் செய்யும் பணியை கண்காணிக்க வேண்டும். மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு வரி வசூல் மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு வரி வசூலை அதிகரிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் வரி ஆகியவற்றை முறைப்படுத்தி மாநகராட்சிக்கு வர வேண்டிய அனைத்து வரி இனங்களையும் வசூல் செய்வதில் வரி வசூலிப்பவர்கள் ஈடுபட வேண்டும்.
மாநகராட்சி வளர்ச்சிக்கு...
வரி வசூலிப்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு மாநகராட்சி வளர்ச்சி பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் குமரவேல், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, கதிரேசன், செல்வராஜ், தியாகராஜன், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், திருஞானம், மூர்த்தி, ராஜேஸ்வரி, பூங்கொடி, தேன்மொழி, சசிகலா, பச்சையம்மாள் உள்பட வருவாய் ஆய்வாளர்கள், உதவி வருவாய் ஆய்வாளர்கள், வரி வசூலிப்பவர்கள் கலந்து கொண்டனர்.