வாரச்சந்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

வடக்குத்தில் வாரச்சந்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2023-10-20 18:45 GMT

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழுதலைவர் கலையரசி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுகுமாரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கை குறித்து பேசியதாவது:- நடராஜ் (தி.மு.க.) முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி ராஜபாண்டியன் (தி.மு.க.) என்பவரும் பேசினார்.

சிற்றரசு (வி.சி.க.):- வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும்.

தேவநாதன் (தி.மு.க.):- கட்டியங்குப்பத்தில் 3 தெருகளுக்கு குடிநீர் முறையாக கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.41 லட்சத்தில் வாரச்சந்தை கட்டும் பணி

கஸ்தூரி செல்வகுமார் (பா.ம.க.):-

பாச்சாரபாளையத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கேட்டறிந்த அதிகாரிகள், பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்க்கப்படும் என்றனர்.

தெய்வசிகாமணி (அ,தி.மு.க.):- வடக்குத்து ஊராட்சி அண்ணாநகரில் கடந்த 2021-ம் ஆண்டு பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ரூ.41 லட்சத்தில் வாரச்சந்தை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 60 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது. இந்த நிலையில் நீதி மன்றத்தில் தனிநபர் பெற்ற தடை உத்தரவை அடுத்து அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதே பூங்கா இடத்தில் ரேஷன்கடை, குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில் வாரச்சந்தை கட்டும் பணி மட்டும் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். அதனை கேட்டறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், நீதிமன்ற தடை உத்தரவை நீக்கி பணிகள் மீண்டும் தொடங்கி முடிக்கப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்