உடன்குடி வாரச்சந்தை கட்டும்பணி தொடங்கியது
‘தினத்தந்தி செய்தி’ எதிரொலியாக உடன்குடி வாரச்சந்தை கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்காக செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
உடன்குடி:
'தினத்தந்தி செய்தி' எதிரொலியாக உடன்குடி வாரச்சந்தை கட்டும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
உடன்குடி வாரச்சந்தை
உடன்குடி மெயின் பஜார் 4 சாலை சந்திப்பு பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் திங்கட்கிழமை தோறும் செயல்படும் வரசந்தை வளாகம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வாரச்சந்தை இதுவாகும். சந்தை நாளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை சுற்றுப்புற பகுதியிலுள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
செய்தி வெளியானது
இந்த வாரச்சந்தையை ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. சந்தைகட்டுமான பணிக்காக ஏற்கனவே இருந்த அனைத்து கடைகட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டன. ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் திறந்தவெளியில் நடைபெற்று வரும் வாரச்சந்தையால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த 19-ந்தேதி தினத்தந்தியில் விரிவாக செய்தி வெளியிட்டு, விரைவாக சந்தை கட்டுமான பணியை தொடங்க வலியுறுத்தப்பட்டது.
கலெக்டர் அதிரடி
இதன் எதிரொலியாக தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன்குடி வாரச்சந்தையில் கட்டுமான பணியை நேற்று தொடங்கி உள்ளனர். இதற்காக இரும்பு கம்பிகள், கருங்கல் ஜல்லிகள், கலவை எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு கடைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினத்தந்திக்கு பாராட்டு
இதற்காக தினத்தந்தி நாளிதழுக்கு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.