அரசு பஸ் படிக்கட்டில் இருந்து போதை வாலிபரை கீழே தள்ளிய கண்டக்டர்
வந்தவாசியில் அரசு பஸ் படிக்கட்டில் இருந்து போதை வாலிபரை கண்டக்டர் கீழே தள்ளியது சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வந்தவாசி டெப்போ சார்பில், வந்தவாசியில் இருந்து பெங்களூருக்கு பஸ் இய க்கப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.
வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார்.
கண்டக்டர் பிரகாஷ் அவரை சிரமப்பட்டு இறக்க முயன்றார். ஆனால் அவர் இறங்காமல் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி நின்றார். அப்போது கண்டக்டர் பிரகாஷ் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் சாலையில் விழுந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பஸ் டெப்போவை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இந்த நிலையில் மதுபோதை பயணியை பஸ் படிக்கட்டில் இருந்து கண்டக்டர் கீழே தள்ளிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில், அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார்.
மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.