அரசு பஸ்சில் இசை கருவியுடன் பயணித்த மாணவியை நடுரோட்டில் இறக்கி விட்ட கண்டக்டர்

நெல்லையில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ்சில் இசை கருவிகளுடன் பயணித்த கல்லூரி மாணவியை கண்டக்டர் நடுரோட்டில் இறக்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-10 19:22 GMT

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் தனியார் பொறியியல் கல்லூரியில் கலை விழா நடந்தது. இதில் அந்த கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நேற்று மாலை ஒரு டிரம்ஸ் மற்றும் பறை இசை கருவிகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதற்காக சீதபற்பநல்லூரில் இருந்து சக மாணவ-மாணவிகளுடன் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து மதுரைக்கு செல்லும் அரசு பஸ்சில் இசை கருவிகளுடன் ஏறி பயணம் செய்தார்.

பஸ் சிறிது தூரம் சென்றதும் மாணவி ரஞ்சிதா கண்டக்டரிடம், தனக்கும், இசைக்கருவிகளுக்கும் சேர்த்து டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது கண்டக்டர், இசைக்கருவிகள் குறித்தும், அவற்றை பஸ்சில் ஏற்றியது தொடர்பாகவும் மாணவியிடம் அவதூறாக பேசி உள்ளார். மேலும் அவருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததுடன், வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்றார். இதனால் மாணவி ரஞ்சிதா அங்கு இசைக்கருவிகளுடன் நின்று கொண்டு கதறி அழுதார். பின்னர் சக மாணவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.

உடனே நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நின்றிருந்த மாணவர்கள் அங்கு வந்து ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கூறினர்.  மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கூறி, சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பின்னர் அந்த வழியாக மதுரைக்கு வந்த வேறொரு அரசு பஸ்சில் கண்டக்டரிடம் நடந்த விவரம் குறித்து எடுத்துக்கூறி ரஞ்சிதாவை இசைக்கருவிகளுடன் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரஞ்சிதா கூறுகையில், 'நான் இதுபோல் அரசு பஸ்சில் இசைக்கருவிகளுடன் பயணம் செய்து உள்ளேன். ஆனால் மதுரை பஸ்சின் கண்டக்டர் இசை கருவிகள் குறித்தும், இசை கலைஞர்கள் குறித்தும் தவறான புரிதலுடன் உள்ளார். அவர் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். பஸ்சில் இருந்த பயணிகள் யாரும் அவரை தட்டிக் கேட்கவில்லை. அந்த கண்டக்டரின் நிர்ப்பந்தத்தால் வேறு வழியின்றி பஸ்சை விட்டு கீழே இறங்கினேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலைஞர்கள் இசைக்கருவிகளை அரசு பஸ்சில் எடுத்துச் செல்ல உரிய வழிகாட்டுதல்களை அரசு பிறப்பிக்க வேண்டும். அதனை போக்குவரத்து கழக அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்