நம்பியூர் அருகே பரபரப்பு நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள்

Update: 2022-06-08 17:24 GMT

நம்பியூர் அருகே நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நில அளவீடு

நம்பியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஓணான்கரடு கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த ஒருவருடைய நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த நிலத்தை அதன் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கு விற்பனை செய்து உள்ளார். இதனால் நிலத்தை வாங்கியவர் அதனை சுற்றிலும் வேலி அமைக்கவே 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார், வருவாய்த்துறையினர் நேற்று அங்கு சென்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை

இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கூறும்போது, 'நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நிலத்தை அளவீடு செய்ய கூடாது. மேலும் இது பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த பாதை. எனவே இந்த பாதையை அடைக்க கூடாது' என்றனர். இதனால் கிராம மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே போலீசார் கிராம மக்களிடம் கூறும்போது, 'நிலத்தை வாங்கியவர் வேலி அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் நில அளவீடு செய்யப்படுகிறது. நில அளவீடு செய்யும் பணியை தடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மறு அளவீடு செய்து கொள்ளலாம்' என்றனர்.

அதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யப்பட்டு அங்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது. பொதுமக்களின் திடீர் முற்றுகையால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்