ரெயில்பெட்டி தீவிபத்து குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்

மதுரையில் நடந்த ரெயில்பெட்டி தீவிபத்து குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-26 18:45 GMT

மதுரையில் நடந்த ரெயில்பெட்டி தீவிபத்து குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி

திருவாரூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலா பயணிகள் ரெயில் நேற்று அதிகாலை மதுரைக்கு வந்தது. இந்த ரெயிலில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த பெட்டிகள் பிரிக்கப்பட்டு மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ரெயில் பெட்டியில் தீவிபத்து

இந்த நிலையில் திடீரென அந்த ரெயில் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அந்த பெட்டியில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பெரும் வேதனை அளிக்கிறது.சுற்றுலா பயணிகள் தனிப்பட்ட முறையில் பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் எப்படி அனுமதிக்கப்பட்டது. அந்த எரிவாயு சிலிண்டரும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

முழுமையாக விசாரிக்க வேண்டும்

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி கோத்ரா ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையும், அதனைத் தொடர்ந்து நடந்த துயரம் மிகுந்த சம்பவங்களும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தென்னக ெரயில்வே துறை தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த ரெயில் பெட்டி தீவிபத்திற்கு சமூக விரோதிகளின் சதி வேலை காரணமா? என்பதை மிகுந்த கவனத்துடன் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்