மூதாட்டியின் தகவல் மூலம் துப்பு துலங்கியது

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி ராஜேஸ்வரி கொலை வழக்கில் மூதாட்டியின் தகவல் மூலம் துப்பு துலங்கியதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

Update: 2023-07-26 04:06 GMT

சென்னை, 

சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த 19-ந்தேதி இரவு 8.30 மணியளவில் பெண் பழ வியாபாரி ராஜேஸ்வரி என்பவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதில், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் தொடர்பாக, மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலையாளிகளை பிடிக்க ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின்பேரில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் வைரவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிதாஸ், சிவகுரு, மணிகண்டன் மற்றும் போலீசார் அடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

பின்னர், சம்பவம் தொடர்பாக கொலையான ராஜேஸ்வரியின் தங்கை நாகவல்லி (23), அவருடைய கணவர் சக்திவேல் (23) மற்றும் ஜெகதீசன் (23), சூர்யா (19), ஜான்சன் (19) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் போலீசாருக்கு துப்பு துலங்கியது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ராஜேஸ்வரி கொலை வழக்கில் எங்களுக்கு துப்பு துலக்குவது பெரும் சவாலாக இருந்தது. சமீப காலமாக கொலை வழக்குகளில் செல்போன் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால், ராஜேஸ்வரி கொலை வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகளோ, செல்போன் பதிவுகள் என எதுவுமே இல்லை. இதனால், திக்கு தெரியாத காட்டில் போவது போல தான் விசாரணையை தொடங்கினோம். ராஜேஸ்வரியின் எதிரிகள் யார், கொலை எதற்காக நடந்தது என்ற  கோணங்களில் எங்களுடைய விசாரணையை தொடங்கினோம். ராஜேஸ்வரியின் சொந்த ஊரிலும் சென்று விசாரித்தோம். இதில், ராஜேஸ்வரியின் தங்கை நாகவல்லியின் கணவருடைய சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சென்று மாறுவேடத்தில் விசாரித்தோம்.

அப்போது, தெருவில் இருந்த மூதாட்டி ஒருவர் இந்த கொலை சம்பவம் குறித்து புலம்பிக்கொண்டிருந்தார். அவர் 'மனசாட்சியே இல்லாம தங்கச்சி நாகவல்லியே இப்படி அக்காவை கொன்னுப்புட்டாளே...' என்று பேசிக்கொண்டிருந்தார். அந்த பகுதியில் விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எங்களது பார்வையில் இதுபட்டது. இது தான் எங்களுக்கு இந்த வழக்கில் துருப்புச் சீட்டாக இருந்தது. மூதாட்டியிடம் பேசியபோது, கணவருடன் சேர்ந்து நாகவல்லி கொலை திட்டம் தீட்டியதையும் தெரிவித்தார். இதையடுத்து, உடனடியாக நாகவல்லியை பிடித்து விசாரித்ததில் அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்தோம். இந்த வழக்கை பொறுத்தவரை மூதாட்டியின் தகவலே எங்களுக்கு பெரிதும் உதவியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருவோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்