ரேஷன் கடைகளில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் திடீர் ஆய்வு
தூத்துக்குடி ரேஷன் கடைகளில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர் சரகம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில், தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, போல்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது விற்பனையாளர்களுக்கு ரேஷன் பொருட்களை பதுக்கல் மற்றும் கடத்தல் கூடாது என்றும், வெளிநபர்கள் யாருக்கும் ரேஷன் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக பொதுமக்கள் புகார் மற்றும் தகவல் தெரிவிக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறைக்கு 1800 5995950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்ற தகவல் அடங்கிய துண்டுபிரசுரங்கள் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.