சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி உத்தவிட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வருவாய்த் துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், நிலுவையில் உள்ள பணிகள், அதற்கான காரணங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் சோளிங்கர் கலைக்கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, அரக்கோணம், ஆற்காடு பகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை தமிழர் குடியிருப்புகள் உள்ள வாலாஜா மற்றும் சோளிங்கர் வட்டங்களில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மயான வழிப்பாதைகள் தொடர்பாக பிரச்சினைகள் உள்ள வட்டங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சான்றிதழ்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து தாசில்தார்களும் தங்கள் வட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் சீரமைப்பு குறித்து அறிக்கையை உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளதை உடனடியாக முடிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் பட்டா வேண்டி வரப்பெறும் விண்ணப்பங்களை தனியாக பதிவு செய்து அவர்களுக்கு பட்டா வழங்குவதையும் அந்த மனுவின் நடவடிக்கையும் கண்காணித்து விரைந்து முடிக்க சிறப்பு கவனமும் செலுத்த வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா, மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.