மிக கனமழை எச்சரிக்கை: கடலூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர்
கடலூருக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
கடலூர்,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (புதன்கிழமை) புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உருவாக இருக்கும் புயலுக்கு 'பெங்கல்' என்று பெயரிடப்பட உள்ளது. இதன்காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் கடலூருக்கு புறப்பட்டனர். உதவி ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உதவி ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரும் இரவு 8 மணி அளவில் கடலூர் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து பேசினர்.
இதையடுத்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியிலும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேவனாம்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் தங்கியுள்ளனர். இவர்கள் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.