புயல், மழையை எதிர்கொள்ள துரிதமான நடவடிக்கை: அமைச்சர் பேட்டி
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை உருவாகும் புயலுக்கு "பெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது. \"பெங்கல்\" என்ற பெயரை சவுதி அரேபியா பரிந்துரை செய்துள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது ,
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை பாதிப்பு தொடர்பாக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார் .புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதல் அமைச்சர் ஆலோசனைகளை வழங்கி உள்ளார் . ஏரிகளில் நீரை சேமிக்கவும் தேவைப்பட்டால் திறந்து விடவும் அறிவுறுத்தியுள்ளார் . நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . என தெரிவித்தார்.