ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு
ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை உருவாகும் புயலுக்கு "பெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது. "பெங்கல்" என்ற பெயரை சவுதி அரேபியா பரிந்துரை செய்துள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சென்னையில் உள்ள 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எதிர்வரும் கனமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்க்கண்ட ஆவின் நவீன பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்க ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
1. அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம்
2. அண்ணாநகர் டவர் பூங்கா பாலகம்
3. மாதவரம் பால்பண்ணை பாலகம்
4. வண்ணாந்துரை பாலகம் மற்றும் பெசன்ட் நகர் பாலகம்
5. வசந்தம் காலனி பாலகம், அண்ணாநகர் கிழக்கு
6. சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம்
7. விருகம்பாக்கம் பாலகம் (வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்)
8. சி.பி. இராமசாமி சாலை பாலகம், மயிலாப்பூர்
எதிர்வரும் கனமழையை கருத்தில்கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் நடைபெற மேற்கண்ட அனைத்து பாலகங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவின் பால் கிடைக்கும் வகையில் ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆவின் பால் பவுடர் மற்றும் யுஹெச்டி பால் ஆவின் பாலகங்களில் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களில் பால் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் தேவைப்படும் பகுதிகளில் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் யுஹெச்டி பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.