இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பதேர்வா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், தோடா மாவட்டத்தின் பலேஸ்சா பகுதிகளிலும் புதிதாக பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் பனிப்பொழிவால் மெதுவாக செல்கின்றன.
இதனால், மரங்கள் மற்றும் சாலைகள் மீது பனி படர்ந்து காணப்படுகின்றன. வெண்மை நிறத்தில் போர்வை போர்த்தியது போன்று பல பகுதிகள் பனியால் சூழப்பட்டு உள்ளன.
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்திருந்த துறவிகளில் ஒருவர், தரையில் குவித்து, பரப்பி வைக்கப்பட்டு இருந்த முட்கள் மீது சாய்ந்து படுத்து, சுற்றியிருந்தவர்களை ஆச்சரியமடைய செய்துள்ளார்.
விண்ணில், செயற்கைக்கோள்களை இணைக்கும் பணி வெற்றியடைந்து உள்ளதுடன், அவற்றை நிலைப்படுத்தும் பணியும் வெற்றி பெற்று உள்ளது. ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தியாவுக்கும் வாழ்த்துகள் என இஸ்ரோ வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவு தெரிவிக்கின்றது.
இதேபோன்று, செயற்கைக்கோள்களை இணைத்த பின்னர், அவற்றை கட்டுப்படுத்தும் பணியும் வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கிற நாட்களில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் பணி மற்றும் மின்சார பரிமாற்ற சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லையில் வடலிவிளை பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் இளவட்டக்கல்லை முன்னால் தூக்கி, தோளின் மீது வைத்து பின்னால் எறிந்தும், ஒரு சிலர் அதனை தூக்கி ஒரு கையில் வைத்து, உயரே தூக்கி பிடித்தும் சாகசத்தில் ஈடுபட்டனர்.
ஆண்களுக்கு பெண்கள் இளைப்பில்லை காண் என்பதற்கேற்ப, பெண்களும் இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சியில் துணிச்சலாக பங்கேற்றனர்.
மீண்டும் ரூ.59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்து ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இதனை இஸ்ரோ விஞ்ஞானிகளின் வட்டாரம் தெரிவிக்கின்றது. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வெற்றி பற்றி குழுவினர் விரிவான தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகின்றனர். தரவுகள் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல்
பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயிப் அலிகானை தாக்கிய மர்மநபரை தேடி வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.
இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா ஆகியோரும் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.
காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் காலை 7.42 மணி அளவில் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இதன்பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்த்து விடப்படும். 1,100 காளைகள், 900 வீரர்களுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டெல்லியில் பனிமூட்டம் 29 ரெயில்கள் காலதாமதம்
டெல்லிக்கு, பல்வேறு நகரங்களில் இருந்து வந்து சேர வேண்டிய 29 ரெயில்கள் இன்று காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதனை இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இவற்றில் பத்மாவதி எக்ஸ்பிரஸ், உத்தர பிரதேச சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
இதேபோன்று அயோத்தி எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் 2 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதனால், ரெயில் பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு வந்துள்ள பயணிகளின் உறவினர்கள் அவதியடைந்து உள்ளனர்.