மாணவர்களின் வாழ்க்கையில் மத்திய அரசு தொடர்ந்து விளையாடி வருகிறது -உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

‘நீட்’ தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை தொடருகிறது' என்றும், மாணவர்கள் வாழ்க்கையில் மத்திய அரசு தொடர்ந்து விளையாடி வருகிறது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-14 23:40 GMT

சென்னை,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் விழா, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கடனுதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ச.திவ்யதர்சினி, செயல் இயக்குனர் பா.பிரியங்கா, வணிகர் நலவாரிய நிர்வாக குழு உறுப்பினர் வி.பி.மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுவதா?

'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகரும் அடுத்தடுத்து தங்கள் உயிரை மாய்த்து உள்ளனர். தொடர்ந்து இதுபோல நடைபெறுகிறது. மத்திய அரசு மாணவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடி வருகிறது. 'நீட்' தேர்வில் விலக்கு கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகில் இருக்கிறார். சமீபத்தில் கூட 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என திமிராக பேசியுள்ளார்.

தி.மு.க. தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதியளித்து உள்ளார். மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்