மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு விலையாக ரூ.50 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு விலையாக ரூ.50 ஆயிரம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-04-18 18:58 GMT

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 9.5 சர்க்கரை பிழித்திறனுக்கு, ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் விலை வழங்க வேண்டும். மாநில அரசு வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து, கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவித்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை புதுப்பித்து நவீனப்படுத்திட மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கிட வேண்டும். அலங்காநல்லூர் நேஷனல், என்.பி.கே.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்த வேண்டும். திருத்தணி, கள்ளக்குறிச்சி, மதுராந்தகம் உள்ளிட்ட கூட்டுறவு ஆலைகளை புதுப்பித்து, புனரமைக்க மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். 140 நாட்களாக திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை எதிரே போராடும் கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு, முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் பெருமாள், துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், நல்லாக்கவுண்டர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்